சேலத்தில் பள்ளி மாணவனை கடத்த முயற்சி? பெண்ணுக்கு தர்ம அடி

சேலத்தில் பள்ளி மாணவனை கடத்த முயற்சி செய்ததாக கூறி பெண்ணுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

Update: 2019-08-02 22:45 GMT
சேலம், 

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர். பள்ளிக்கு வந்த ஒரு ஆட்டோவில் மாணவ, மாணவிகள் சிலர் இறங்கி பள்ளிக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வர்ஷன் (வயது 6) என்ற மாணவன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கு பள்ளியின் அருகில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்து சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வர்ஷனிடம் சாக்லெட்டை காண்பித்து உள்ளார்.

இதையொட்டி மாணவன் அந்த பெண்ணிடம் வந்தான். அப்போது அந்த பெண் மாணவனிடம் ஒரு சாக்லெட்டை கொடுத்து சற்று தூரம் மாணவனை அழைத்து சென்றார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஒரு பெண் மாணனை கடத்தி செல்கிறாள் என்று சத்தம் போட்டனர். இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் மாணவனை மீட்டு, அந்த பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டு விசாரித்தனர். அப்போது அந்த பெண் தன் பெயர் லட்சுமி என்றும், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மாறி, மாறி பதில் அளித்தார். மேலும் ஒரு சில நேரங்களில் மன நிலை பாதித்தவர் போல் பேசினார்.

இந்த நிலையில் பொது மக்கள் தாக்கியதில் அந்த பெண்ணின் உடலில் காயம் ஏற்பட்டது. இதையொட்டி போலீசார் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண் மாணவனை கடத்தி செல்ல முயற்சி செய்தாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று காலை சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்