ஆடி 3-வது வெள்ளியையொட்டி நாமக்கல் மங்கள மாரியம்மனுக்கு வளையல் அலங்காரம்
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று நாமக்கல்லில் பாலதண்டாயுத பாணி சாமிக்கு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மங்கள மாரியம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் ராஜீவ்காந்தி நகரில் பிரசித்தி பெற்ற மங்கள மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், திருமஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மங்கள மாரியம்மன் சாமி வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாலையில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெற வேண்டியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டின் போது, அம்மனுக்கு சுமார் 16 ஆயிரம் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் முருகனுக்கு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர், மஞ்சள், பழச்சாறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் பாலதண்டாயுதபாணி சாமிக்கு தீபாராதனை நடைபெற்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.