திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவிகள் வாடகை கட்டிடத்தில் படிக்கும் அவலம்
திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவிகள் வாடகை கட்டிடத்தில் படிக்கும் அவலநிலை உள்ளது. விரைவில் பழைய நகராட்சி அலுவலகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
இந்த வகுப்புகளுக்கு தேவையான அறைகள் நகராட்சி பெண்கள் பள்ளி வளாகத்தில் இல்லாததால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில மீடியம் மாணவிகளுக்கான வகுப்புகள் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் திருவண்ணாமலை சன்னதி தெருவில் செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகம் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை சாரோனில் உள்ள புதிய நகராட்சி அலுவலகத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இந்த பழைய நகராட்சி அலுவலகத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வகுப்புகள் மற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான பூர்வாங்க பணிகள் பழைய நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அந்த அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வகுப்பறைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்திரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வகுப்பறைகள் பழைய நகராட்சி அலுவலகத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இன்னும் ஓரிரு வாரங்களில் இங்கு மாற்றப்படும் என்றனர்.