சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 900 பேரிடம் நேர்காணல் நடந்தது
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த 900 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
மும்பை,
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த 900 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
விருப்ப மனு
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 6-ந் தேதியுடன் முடிந்து இருந்தது.
நேர்காணல்
இந்த நிலையில் மாநில முழுவதும் விருப்ப மனு செய்த சுமார் 900 பேரிடம் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று முன்தினம் வரை நேர்காணல் நடத்தினர். லாத்தூர் புறநகர் தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகன் திரஜ் தேஷ்முக் விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார். அவர் லாத்தூரில் நடந்த நேர்காணலில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே திரஜ் தேஷ்முக்கின் அண்ணன் அமித் தேஷ்முக் லாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தொகுதிகளில்...
மும்பையில் உள்ள 36 தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட 186 பேர் விருப்பமனு தாக்கல் செய்து இருந்தனர். தலித் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
தகிசர், வடலா, பைகுல்லா, சிவாஜிநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட அதிகபட்சமாக தலா 6 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதேபோல மும்பாதேவி தொகுதியில் போட்டியிட முன்னாள் மந்திரி செய்யது அகமதுவின் மகன் செய்யது சீசான் அகமது விருப்ப மனு தாக்கல் செய்து உள்ளார். தற்போது அந்த தொகுதியில் காங்கிரசை சேர்ந்த அமின்பாட்டீல் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்ராவ் தாக்கரே மற்றும் ஹர்ஷவர்தன் பாட்டீல் ஆகியோர் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமை ஆகிய 2 நாட்கள் நேர்காணல் நடத்தினர்.