ஒரே மாணவிக்கு 2 விதமான சாதி சான்றிதழ்: சட்டசபையை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர் போராட்டம்
ஒரே மாணவிக்கு 2 விதமான சாதி சான்றிதழ் வழங்கியதை கண்டித்து பழங்குடியின மக்கள் கூட்டமைப்பினர் சட்ட சபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை தாலுகா அலுவலகம் சார்பில் மாணவி ஒருவருக்கு குடிபெயர்ந்த எஸ்.டி. வகுப்பு என்றும், பிற்படுத்தப்பட்ட பழங்குடி என்றும் சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி குடி பெயர்ந்த எஸ்.டி. பிரிவினர் என்ற சான்றிதழை கொண்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் என்ற சான்றிதழை கொண்டு சென்டாக்கிலும் விண்ணப்பித்துள்ளார். தற்போது அவருக்கு தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்துள்ளது.
அந்த மாணவிக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை ரத்துசெய்யக்கோரி புதுவை மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் புதுவை சட்டசபையை முற்றுகையிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பெரியகடை போலீசார் அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள்.
இந்த போராட்டம் தொடர்பாக பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் கூறியதாவது:-
ஒரே நபருக்கு 2 விதமான சாதி சான்றிதழ் வழங்கியதை ரத்துசெய்யக்கோரி முதல்- அமைச்சர், கலெக்டர், சென்டாக் சேர்மன், கன்வீனர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்தி ரத்து செய்யுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுபோல் பாதிப்படைந்த காரைக்கால் மாணவர் ஒருவர் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றார். இதுசம்பந்தமாக போர்க்கால நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மாணவியின் சாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தவறான சாதி சான்றிதழ் அளித்தவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.