ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதி உதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கலெக்டர் ஷில்பா தகவல்
ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார்.
நெல்லை,
ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதி உதவி கேட்டு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜெருசலேம் புனித பயணம்
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள், இதில் 50 கன்னியாஸ்திரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டார் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகளை www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம்.
கால அவகாசம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம்-2019-20“ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டிடம்(முதல் தளம்), சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு இந்த மாதம் 30-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.