உலக தாய்ப்பால் வார விழாவில் கொழு,கொழு குழந்தைகளுக்கு பரிசு கலெக்டர் ஷில்பா வழங்கினார்
பாளையங்கோட்டையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவில் கொழு,கொழு குழந்தைகளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பரிசுகளை வழங்கினார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவில் கொழு,கொழு குழந்தைகளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பரிசுகளை வழங்கினார்.
தாய்ப்பால் வார விழா
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உலக தாய்ப்பால் வார விழா நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசும் போது, “தாய்ப்பால் தரும் பழக்கம் பெண்களிடையே குறைந்து வருகிறது. பெண்கள் குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதனால் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் வளரும். தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றி அறிவியல் பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தாய்ப்பாலின் தேவையை அறிந்து பஸ் நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் அறை திறக்கப்பட்டு உள்ளது. எனவே தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்” என்றார்.
பரிசு
தொடர்ந்து கொழு, கொழு குழந்தைகளுக்கு கலெக்டர் ஷில்பா பரிசுகளை வழங்கினார். விழாவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசூர்யா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, சுகாதார பணிகளின் இணை இயக்குனர் செந்தில்குமார், மாநகராட்சி நல அலுவலர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.