ஆழ்வார்திருநகரி அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, ஆழ்வார்திருநகரி அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்திருப்பேரை,
தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, ஆழ்வார்திருநகரி அருகே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
ஆழ்வார்திருநகரி அருகே ஆதிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்ததால், பழைய மாணவர்கள் சங்கம் சார்பில், கூடுதலாக 4 ஆசிரியைகளை தற்காலிகமாக நியமித்துள்ளனர். மேலும் பள்ளியிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்து, தற்போது அங்கு 65 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் செயல்படுவதாக கூறி, பள்ளியின் தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று காலையில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து ஏரல் தாசில்தார் அற்புதமணி, துணை தாசில்தார் சேகர் ஆகியோர் அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அவர்களிடம், தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் முறையிட்டனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் அற்புதமணி தெரிவித்தார். இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்புவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.