வேலூர் நாடாளுமன்ற தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அரசியல் கட்சியினர்

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் பணம் கொடுக்க முயன்றனர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் ரூ.39 ஆயிரத்தை தூக்கி வீசிவிட்டு ஓட்டம் பிடித்தனர்.;

Update: 2019-08-01 22:15 GMT
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட விரிஞ்சிபுரம் பகுதியில் பறக்கும் படையை சேர்ந்த மாநில வணிகவரி அலுவலர் நடராஜன் தலைமையில் போலீசார் வாகனசோதனை நடத்தி கொண்டு இருந்தனர்.

அப்போது ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் வாக்காளர்களுக்கு ஒரு கட்சியை சேர்ந்த சிலர் பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த சிலர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

அவர்கள் வருவதை பார்த்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பணத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சிதறி கிடந்த அந்த பணத்தை அதிகாரிகள் எடுத்து எண்ணி பார்த்தபோது அதில் ரூ.39 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அந்த பணம் அணைக்கட்டு தாசில்தார் பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணத்தை வீசி சென்றது யார்? என்பது குறித்து அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்