சூளகிரி அருகே வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை

சூளகிரி அருகே வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-01 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி அருகே 1952-ம் ஆண்டில், முத்தூர் அணை கட்டும்போது, அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு, சூளகிரி அருகே கொட்டாயூர், துரிஞ்சிப்பட்டி, எப்பளம், டேம் எப்பளம், கோவில் எப்பளம் ஆகிய இடங்களில் தமிழக அரசு இடம் வழங்கி குடியமர்த்தப்பட்டது. ஆனால் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றும், அதே போல சின்னகுத்தி, சிகரலபள்ளி, ராமன்தொட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பல ஆண்டுகளாகியும் இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சூளகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

சூளகிரி வட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளரும், முன்னாள் அரூர் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட தலைவர் கோதண்டராமன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி மற்றும் நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

மாலைவரை நடந்த இந்த போராட்டம் குறித்து அறிந்ததும், ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி ஆகியோர் அங்கு சென்று, சூளகிரி தாசில்தார் ரெஜினா மற்றும் அதிகாரிகள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 2 மாதத்திற்குள் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்