வண்ணாரப்பேட்டை சுரங்கப்பாதை பணியில் மண்சரிவு மாற்றுப்பாதையில் ரெயில் சேவை

வண்ணாரப்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால், மாற்றுப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

Update: 2019-08-01 22:30 GMT
பிராட்வே,

சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் செல்லும் ரெயில்களும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி செல்லும் ரெயில்களும், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் வழியாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளம் வழியாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இங்கு அடிக்கடி ரெயில்கள் செல்வதால், போஜராஜன் பகுதி மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் வசதிக்காக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தண்டவாளத்திற்கு கீழே பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அங்கு தண்டவாளத்தில் அருகே இருந்த மண் கரைந்து பள்ளத்தில் சரிந்தது. இதனால், அங்கிருந்த ரெயில்வே தண்டவாளம் கீழே பள்ளத்தில் இறங்கியது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தண்டவாள பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் மண்சரிவை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த வழியாக இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் பேசின்பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டை வழியாக தற்காலிகமாக இயக்கப்பட்டன. அதன் பின்னர், மதியம் 12 மணிக்கு மேல் மீண்டும் பழைய வழித்தடத்தில் ரெயில்கள் இயங்கின.

மேலும் செய்திகள்