அரசு திட்டங்களில் இடைத்தரகர்களுக்கு கடிவாளம் போட கண்காணிப்பு அதிகாரிகள் எடியூரப்பா உத்தரவு
அரசு திட்டங்களில் இடைத்தரகர்களுக்கு கடிவாளம் போட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
அரசு திட்டங்களில் இடைத்தரகர்களுக்கு கடிவாளம் போட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கமிட்டி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாநில அரசின் நிதி நிலை, விவசாய கடன் தள்ளுபடி, வீட்டு வசதித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் இருந்து எடியூரப்பா விவரங்களை கேட்டறிந்தார்.
குறிப்பாக குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, அமல்படுத்தப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் இதுவரை விடுவிக்கப்பட்ட பணம் எவ்வளவு, அது முறையாக உரிய பயனாளிகளை போய் சேர்ந்துள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் எடியூரப்பா விவரங்களை கேட்டு பெற்றார்.
கண்காணிப்பு அதிகாரிகள்
அதிகாரிகள் பேசும்போது, ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை ரூ.18 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ரூ.27 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர். பின்னர் எடியூரப்பா பேசியதாவது:-
விவசாய கடன் தள்ளுபடியில் இருக்கும் குறைகளை சரிசெய்ய வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. நிதி நிலையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இல்லை. அரசு துறைகளில் அமல்படுத்தப்படும் திட்டங்களில் இடைத்தரகர்களுக்கு கடிவாளம் போட கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில்...
இதில் ஏதாவது சிக்கல் இருந்தால் அதை சரிசெய்து, திட்டங்களை முழுமையான அளவில் அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை உள்ளதோ அதுகுறித்து ஒரு பட்டியலை தயாரித்து என்னிடம் வழங்க வேண்டும். அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
குமாரசாமி ஆட்சி அதிகாரத்தை விட்டு செல்லும்போது, தனியார் கடன் தள்ளுபடி சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவு ஆகும். அந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு கட்டும் திட்டங்கள்
தனியார் கடன்தாரர்கள் (லாவாதேவிக்காரர்கள்), பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், வீட்டு வசதித்துறையில் வீடு கட்டும் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. முந்தைய அரசுகள் எப்படி பணியாற்றியது என்பது முக்கியம் அல்ல.
எனது ஆட்சியில் அனைத்து துறைகளுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். எந்தெந்த பகுதியில் அவசரமாக வீடுகள் கட்ட வேண்டுமோ அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை உடனே முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பயனாளிகள் பாதிக்கப்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.