ரூ.2¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் உள்பட 2 பேர் கைது

ரூ.2¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-31 22:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மொய்தீன் வீதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 30). ஜவுளி வியாபாரி. இவருக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் அருகில் உள்ளது. இந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய யுவராஜ் முடிவு செய்தார். இதற்கு அங்கீகாரம் பெற ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் வீட்டுவசதி வாரிய வணிக வளாகத்தில் உள்ள உள்ளூர் திட்டக்குழுமம் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராஜ் விண்ணப்பித்தார்.

அந்த நிலத்துக்கு அங்கீகாரம் வழங்க ஈரோடு உள்ளூர் திட்டக்குழும உதவி இயக்குனர் இளங்கோ (வயது 52), வரைவாளர் சதீஸ் (43) ஆகியோர் ரூ.2½ லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளனர். அதற்கு யுவராஜ் பணத்தை குறைத்து கொள்ளுமாறு கேட்டு உள்ளார். இறுதியாக ரூ.2¼ லட்சம் லஞ்சம் கொடுக்க அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனப்பொடி தடவிய ரூ.2¼ லட்சத்துடன் யுவராஜ் நேற்று மாலை ஈரோடு உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அலுவலகத்தில் உதவி இயக்குனர் இளங்கோ, சர்வேயர் மூர்த்தி (32) ஆகியோர் இருந்தனர். சதீஸ் விடுமுறையில் சென்றிருந்தார். இதனால் இளங்கோ, மூர்த்தி ஆகியோரிடம் யுவராஜ் ரூ.2¼ லட்சத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கருணாகரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உதவி இயக்குனர் இளங்கோ, சர்வேயர் மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் லஞ்சம் வாங்கிய ரூ.2¼ லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய சதீசை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்