ஆடி அமாவாசையையொட்டி வைகையாற்றில் முன்னோர்களுக்கு வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி திருப்புவனம் வைகையாற்றில் ஏராளமானோர் முன்னோர் களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.;

Update: 2019-07-31 21:45 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் வைகையாற்று கரையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள வைகையாற்றில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறுவது வழக்கம். இங்கு தர்ப்பணம் செய்தால் காசியைவிட சிறந்தது என்று முன்னோர்கள் கூறியதாக வரலாறு கூறுகிறது. இதனால் சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமானோர் திருப்புவனம் வைகையாற்றில் தினமும் திதி மற்றும் தர்ப்பணம் செய்ய வருவார்கள்.

அதன் பின்னர் புஷ்பவனேசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாலய அமாவாசை ஆகிய தினங் களில் திருப்புவனம் வைகையாற்றில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்ய வருவது உண்டு. நேற்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 6 மணி முதல் திருப்புவனம் வைகையாற்றில் ஏராளமானோர் தங்களது முன்னோர் களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்ய குவிந்தனர். பின்னர் தர்ப்பணம் கொடுத்தவர்கள் புஷ்பவனேசுவரர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். காளையார்கோவில் சொர்ணகாளஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இதேபோல் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கோவில் தெப்பக்குளம் கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர் களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். மானாமதுரை அருகே உள்ள காசி விசுவநாதர் கோவில் பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து காசி விசுவநாதரை வழிபாடு செய்தனர். இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தேவர் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்