விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைவு: தென் மண்டல அளவில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம்

சாலை விபத்துகளையும், அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையையும் குறைப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் தென்மண்டல அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2019-07-31 22:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்க போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து சாலை பாதுகாப்பு நிதியின்்கீழ் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் எச்சரிக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர விபத்துகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வேகத்தை குறைக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளுக்கு விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பயனாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி உள்ளடக்கிய தென் மண்டல அளவில் ராமநாதபுரம் மாவட்டம் விபத்து பலி எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட 35 சதவீதம் குறைத்து முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 158 பேர் பலியான நிலையில் இந்த ஆண்டு 103 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக 2-வது இடத்தை பிடித்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 328 பேர் பலியான நிலையில் இந்த ஆண்டு 224 பேர் பலியாகி உள்ளனர். 3-வது இடத்தை பிடித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 202 பேர் பலியான நிலையில் இந்த ஆண்டு 154 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்