ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி அமாவாசையையொட்டி மேட்டூர், ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
மேட்டூர்,
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசை ஆடி அமாவாசை யாகும். இந்த ஆடி அமா வாசையில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களை சென்றடைகிறது என்பது ஐதீகம். ஆடி அமாவாசை அன்று இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று ஆடி அமாவாசை என்பதால், மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீராடினார்கள். இதைத்தொடர்ந்து ஆற்றங்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அங்கு புரோகிதர்கள், சிவாச்சாரியார்கள் திரண்டு இருந் தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தவர்கள் தங்களது மூதாதையர்களின் பெயரை கூறி, பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம் உள்பட பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து, முன்னோர்களை வழிபட்டனர்.
இதே போல மேட்டூர் அணைக்கட்டு முனியப்பசாமி கோவிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி, முனியப்பசாமியை தரிசனம் செய்தனர். ஒரு சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளை மேட்டூர் பூங்காவுக்கு எடுத்து சென்று சாப்பிட்டனர். முனியப்பசாமி கோவில், காவிரி ஆற்றங்கரை, மேட்டூர் பஸ் நிலையம், பூங்கா ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கொளத்தூர் அருகே உள்ள மாதேஸ்வரன் மலை கோவிலுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்றனர். இதனால் தர்மபுரி, சேலம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதே போல ஆடி அமாவாசையான நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அங்கு அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதேபோன்று ஏரியூர், நாகமரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.