கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் தேவேகவுடா பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என்று தேவேகவுடா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என்று தேவேகவுடா கூறினார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தகுதி நீக்கம்
கர்நாடகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் மூலம் தகுதி நீக்கம் செய்துள்ளோம். மேலும் அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளோம். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டில் என்ன முடிவு வருகிறதோ அதை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக சட்டசபைக்கு 3 மாதங்களிலோ அல்லது 6 மாதங்களிலோ தேர்தல் வரலாம். ஆனால் நாங்கள் இப்போது இருந்தே தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். கட்சி தலைவர்கள் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என்றும், குமாரசாமி ஆட்சியின் 14 மாத காலத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்.
7-ந்தேதி கட்சி மாநாடு
வருகிற 7-ந் தேதி எங்கள் கட்சியின் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கிறது. இதில் மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். செயல்படாமல் உள்ள கட்சியின் பல்வேறு அணிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
புதிய சபாநாயகர் காகேரிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் மந்திரியாக இருந்தபோது சிறப்பான முறையில் பணியாற்றினார். அவர் கட்சி பேதமின்றி பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.