ஜோலார்பேட்டையில், செல்போன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி - வடமாநில வாலிபருக்கு அடி-உதை

ஜோலார்பேட்டையில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

Update: 2019-07-30 23:00 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி ரெயில்வே காலனி கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 28). இவர் போஸ்ட் ஆபிஸ் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். ஒருவர் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து, திருடன் திருடன் என கூச்சலிட்டனர்.

அதைக் கேட்டு அருகில் இருந்த வாலிபர்கள் ஒன்று திரண்டு அந்த கொள்ளையனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயன்ற அந்த நபர் அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபர் சர்ட் பாக்கெட்டில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது, அதில் ஒடிசா மாநிலம், கன்ஜம் மாவட்டம் என்றும் குப்பினாமாலிக் மகன் புட்டியாமாலிக் (வயது 34) என தெரியவந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து அப்பகுதியில் இவர் சுற்றி திரிந்து, எந்தெந்த வீடுகள் பூட்டி இருக்கிறது என பகலில் கண்காணித்து இரவில் கொள்ளையில் ஈடுபட முயன்றது என தெரியவந்தது.

சிகிச்சைக்கு பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்