கருப்பூரில், பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - முறையாக அளவீடு செய்ய கோரிக்கை
சேலம் கருப்பூரில் முறையாக அளவீடு செய்ய கோரி பாலம் கட்டும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருப்பூர்,
சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நீரோடை உள்ளது. இந்த நீரோடையின் மேலே இருந்த சிறிய பாலம் வழியாக வட்டக்காடு, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, செங்கரடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் வரும் போது வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை கடப்பதற்கு சிரமம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த நீரோடையின் மேலே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பாலத்தின் மேற்பரப்பில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் நடந்தது. அப்போது வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலம் கட்டுமானம் நடக்கும் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் கூறும்போது, ‘இந்த பாலம் கட்டுவதற்காக பொதுமக்களுக்கு எதிராகவும், ஒரு சிலருக்கு ஆதரவாகவும் அளவீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே முறையாக அளவீடு செய்து பாலத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.