இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை, நங்கவள்ளியில் கடைகள் அடைப்பு - பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நங்கவள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேச்சேரி,
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை தாசகாப்பட்டியை சேர்ந்தவர் வேலுதங்கமணி (வயது 34). ஜவுளிக்கடை உரிமையாளர். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவரது ஜவுளிக்கடை நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே உள்ளது. கடந்த 16-ந்தேதி இவரது கடைக்கு 2 வாலிபர்கள் துணி வாங்குவது போல் வந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து வேலுதங்கமணியை சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி நங்கவள்ளியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக நங்கவள்ளி அருகே உள்ள சம்மட்டியூரை சேர்ந்த சதீஷ் (34), மேட்டூர் தெர்மல்நகரை சேர்ந்த மணி என்கிற மோகன்ராஜ் (28) ஆகிய 2 பேர் கடந்த 23-ந்தேதி சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேலுதங்கமணியை, மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிலைமை கவலைக்கிடமானதையடுத்து மீண்டும் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வேலுதங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மேலும் சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு, வேலுதங்கமணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நேற்று நங்கவள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. நங்கவள்ளி அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் பஸ் நிலையம், வனவாசி வழியாக தாசகாப்பட்டியை அடைந்தது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், சுப்பராயன் எம்.பி., உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வேலுதங்கமணி வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நங்கவள்ளி, வனவாசி ஆகிய பகுதிகளில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கூடுதல் சூப்பிரண்டு அன்பு, துணை சூப்பிரண்டுகள் சரவணன், சவுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டதுடன், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே நேற்று காலை நங்கவள்ளியில் இருந்து மேட்டூர் செல்லும் ரோட்டில் வீரக்கல் என்ற இடத்தில் தாரமங்கலம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கடைகள் அடைப்பு, பஸ் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்களால் நங்கவள்ளி பகுதியில் பதற்றம் நிலவுவதால் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.