வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

அம்பத்தூர் வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-07-30 22:36 GMT
பூந்தமல்லி,

அம்பத்தூர் அடுத்த ஒரகடம், நாதமுனி 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நிரஞ்சன் (வயது 30). கடந்த 2013-ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 4 பேர் இவரது உறவினரை கிண்டல் செய்ததை நிரஞ்சன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில், ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து கொண்டு நிரஞ்சனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நிரஞ்சன் வீட்டிற்கு சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த கொலை குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து, அம்பத்தூரைச் சேர்ந்த வினோபா (என்ற)அப்பு (24), ராஜரத்தினம் (24), ராஜேஷ் (29), பார்கவ் (23), ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் 4 பேர் மீதும் கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறினார். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்