‘மகா ஜனாதேஷ்’ ரத யாத்திரைக்காக முதல்-மந்திரிக்கு பிரத்யேக வாகனம் தயார்
‘மகா ஜனாதேஷ்’ யாத்திரைக்காக முதல்- மந்திரிக்கு பிரத்யேக வாகனம் தயார் நிலையில் உள்ளது.
மும்பை,
‘மகா ஜனாதேஷ்’ யாத்திரைக்காக முதல்- மந்திரிக்கு பிரத்யேக வாகனம் தயார் நிலையில் உள்ளது.
முதல்-மந்திரி யாத்திரை
மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே மக்களை சந்திக்கும் வகையில் கடந்த 21-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய யாத்திரையை தொடங்கினார்.
இந்தநிலையில் சிவசேனாவின் கூட்டணி கட்சியான பா.ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் மக்களை சந்திக்கும் வகையில் மாநிலம் தழுவிய ரத யாத்திரையை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறார்.
இதன்படி அவர் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு மாத காலம் மாநிலம் தழுவிய ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தம் 4 ஆயிரத்து 384 கி.மீ. தூரத்துக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். அமராவதி மாவட்டத்தில் தனது யாத்திரையை முதல்-மந்திரி தொடங்குகிறார்.
வாகனம் தயார்
இந்தநிலையில், முதல்- மந்திரி பட்னாவிசின் ‘மகா ஜனாதேஷ்’ யாத்திரைக்காக பிரத்யேக வாகனம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வாகனத்தை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அறி முகப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
யாத்திரைக்காக பா.ஜனதா தலைமை இரண்டு வாகனங்களை வழங்கியுள்ளது. இதில் ஒன்று, மத்திய மந்திரி அமித்ஷா உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கு பயன்படுத்தியது. மற்றொன்று மத்திய பிரதேச மாநிலத்தில் அதன் முன்னாள் முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் பயன்படுத்தியதாகும். ஏற்கனவே நாங்கள் வெற்றிகரமாக பயன்படுத்திய வாகனங்களை மராட்டிய சட்டசபை தேர்தலிலும் பன்படுத்துவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
நவீன இருக்கைகள்
ரத யாத்திரை வாகனத்தில் வெளிப்புறத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோரின் படம் இடம் பெற்று உள்ளது.
மராட்டிய மாநில வரைபடத்தில் இடம் பெற்றுள்ள பட்னாவிசின் படம் பா.ஜனதாவினரை கவர்ந்து உள்ளது. பா.ஜனதாவின் தாமரை சின்னமும் இடம் பெற்று உள்ளது.
வாகனத்தில் ‘ஹைட்ராலிக்' முறையில் நவீன இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கை வாகனத்தின் மேற்பகுதிக்கு செல்லும் வசதி கொண்டது. யாத்திரையின் போது பேசுவதற்காக, இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் நரிமன்பாயிண்டில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.