தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது ரூ.8 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 19 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-07-30 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தெற்குஅலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடைபெற்று வந்தது. இந்த திருட்டை தடுக்கவும், இதுவரை திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன், ஏட்டுகள் மோகன்தாஸ், ராஜேஸ்கண்ணன், சிவபாலசேகர், கவுதமன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், ரெயிலடி பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சந்தேகப்படும்படி நபர் நடந்து செல்வதும், அதே நபர் சிறிதுநேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வதும் பதிவாகி இருந்தது. உடனே அந்த நபரின் புகைப்படங்கள் ரெயிலடி, பஸ் நிலையங்களில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் வழங்கப்பட்டு, இவரை பார்த்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி மாலை ரெயில் நிலையத்திற்கு பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருட வாலிபர் முயன்றார். அந்த வாலிபர் தான் ஏற்கனவே போலீசார் கொடுத்த புகைப்படத்தில் இருந்தவர் என்பதால் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை தெற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை தனிப்படை போலீசார் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அவரிடம் மோட்டார் சைக்கிள்களின் சாவிகள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர், பட்டுக்கோட்டை தாலுகா செந்தலைபட்டினத்தை சேர்ந்த முகமதுசாதிக் மகன் ரகமத்துல்லா(வயது35) என்பதும், தஞ்சையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வரும் ரகமத்துல்லா அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வதும், அப்படி வரும்போது தஞ்சையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்று நண்பர்களிடம் கொடுத்து ஓட்ட சொல்வதும், பின்னர் சில நாட்களில் அந்த மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து ரகமத்துல்லாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 19 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்