கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காணொலி காட்சி மூலம் இன்று முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார்

கரூர் காந்தி கிராமத்தில் ரூ.295 கோடியில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

Update: 2019-07-30 23:00 GMT
கரூர்,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கரூர் அரசு தலைமை மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி அமைக்க, கரூர் காந்திகிராமம் பகுதியில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 850 படுக்கைகள் கொண்ட, 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய வகையில் மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பணிகள் தொடங்கப்பட்டு துரிதமாக நடைபெற்றன.ரூ.295 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்தன. மேலும் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கு ஏதுவாக நிர்வாக அலுவலக கட்டிடம், ஆய்வகம், வகுப்பறை, நூலக கட்டிடங்கள், மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலை 11 மணியளவில் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கீதா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கலெக்டர் அன்பழகன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரோஸி வெண்ணிலா உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட உள்ளதால், முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்டு மாதத்தில் தொடங்க இருக்கின்றன. இந்த ஆண்டு முதல் மருத்துவமனையும், கல்லூரியும் சேர்ந்தே இயங்க உள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட பின்பு கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கரூரைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்