நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாநில குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். அச்சன்புதூர் தலைவர் மீராக்கனி, செயலாளர் சலீம், வடகரை தலைவர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய சங்க தலைவர் ராஜகுரு, செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
கோரிக்கைகள்
கடும் வறட்சியால் பட்டுப்போன 50 லட்சம் தென்னை மரங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கவேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் தென்னை வாரியத்தை அமைக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையம் தொடங்க வேண்டும். உரித்த தேங்காயை கேரள அரசை போல் கிலோ ரூ.51-க்கு தமிழக அரசே கொள்முதல் செய்யவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி பணத்தை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.