முதியவர் கல்லால் அடித்துக்கொலை: வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்

முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

Update: 2019-07-30 23:00 GMT
அந்தியூர்,

அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள முரளி காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 72). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராமராஜ் (30). தொழிலாளி. ராமராஜூக்கும், பழனிக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந்தேதி ராமராஜூக்கும், பழனிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராமராஜ், அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து, பழனியை தாக்கினார்.

இதனால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரை அடித்துக் கொலை செய்ததாக ராமராஜை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார், பவானியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காந்தி, பழனியை கல்லால் அடித்துக் கொலை செய்த குற்றத்துக்காக ராமராஜூக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற ராமராஜை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்