கோபால்பட்டி அருகே, அய்யனார் கோவிலில் வெண்கல மணிகளை திருட முயற்சி - பூசாரி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் தப்பியோட்டம்

கோபால்பட்டி அருகே அய்யனார் கோவிலில், வெண்கல மணிகளை மர்மநபர்கள் திருட முயன்றனர். பூசாரி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.

Update: 2019-07-30 22:30 GMT
கோபால்பட்டி,

கோபால்பட்டியை அடுத்த அய்யாபட்டியில், சிறுமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. அய்யாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் சேர்ந்து இந்த கோவில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் கிராம மக்கள் நேர்த்திக்கடனாக வெண்கல மணிகளை வாங்கி அங்குள்ள மரத்தில் ஆணி அடித்து தொங்கவிட்டு செல்வது வழக்கம். அதன்படி கோவிலில் ½ கிலோ முதல் 5 கிலோ வரையில் 100-க்கும் மேற்பட்ட மணிகள் தொங்குகின்றன. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மரத்தில் தொங்கிய மணிகளை மர்ம நபர்கள் திருட முயன்றனர். மணிகளின் சத்தம் கேட்டு கோவிலின் அருகே தங்கியுள்ள பூசாரி அழகர்சாமி (வயது 32) எழுந்து வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் கோவில் மணிகளை திருடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அழகர்சாமி சத்தம் போட்டார்.

இதையடுத்து மர்மநபர்கள் தாங்கள் கொண்டு வந்த சாக்கு மற்றும் திருடிய மணிகளை கீழே போட்டு விட்டு காட்டுக்குள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அழகர்சாமி கிராமத்துக்குள் வந்து தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அய்யாபட்டி கிராம மக்கள் சார்பாக சாணார்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த அய்யனார் கோவிலில் கடந்த மாதம் விநாயகர், கருப்புசாமி சிலைகளை மர்மநபர்கள் உடைத்து சென்றனர்.

அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையில் மீண்டும் மர்மநபர்கள் கோவிலில் புகுந்து வெண்கல மணிகளை திருட முயன்ற சம்பவம் அய்யாபட்டி பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்