கர்நாடக சட்டசபையின் புதிய சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி இன்று பதவி ஏற்கிறார்
கர்நாடக சட்டசபை சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரியும், மூத்த எம்.எல்.ஏ.வுமான விஸ்வேசுவர ஹெக்டே காகேரி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குமார சாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.
கூட்டணி அரசு கவிழ்ந்தது
அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ததால், கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. இதையடுத்து ராஜினாமா செய்யாத எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா தானாகவே பெரும்பான்மை பலத்தை பெற்றது. அதன் அடிப்படையில் கவர்னரின் அழைப்பின்பேரில் எடியூரப்பா முதல்-மந்திரியாக கடந்த 26-ந் தேதி பதவி ஏற்றார். அதன் பிறகு 29-ந் தேதி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் கடந்த 29-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
விஸ்வேசுவர ஹெக்டே காகேரி
இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 31-ந் தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு 30-ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றது. இதில் பா.ஜனதா சார்பில் முன்னாள் சபாநாயகர் கே.ஜி.போப்பையா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் பா.ஜனதா மேலிடத்தின் உத்தரவுப்படி முன்னாள் மந்திரியும், பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.வுமான விஸ்வேசுவர ஹெக்டே காகேரி நேற்று மனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு விதான சவுதாவில் சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் அவர் தனது மனுவை வழங்கினார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.
போட்டியின்றி ஒருமனதாக...
சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 48 வயதான அவர், சபாநாயகராக தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டசபையில் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் புதிய சபாநாயகராக பதவி ஏற்கிறார்.
அவரை முதல்-மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வாழ்த்தி பேசுவார்கள். இன்றைய கூட்டத்தை தொடர்ந்து சட்டசபை காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்படுகிறது. புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள விஸ்வேசுவர ஹெக்டே காகேரி, தொகுதி மறுவரையறை செய்யப்படுவதற்கு முன்பு, அங்கோலா தொகுதியில் 3 முறையும், தற்போது சிர்சி தொகுதியில் 3 முறையும் என மொத்தம் 6 முறை கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறை மந்திரி
கடந்த 2008-13-ம் ஆண்டில் எடியூரப்பா தலைமையிலான மந்திரி சபையில், விஸ்வேசுவர ஹெக்டே காகேரி பள்ளி கல்வித்துறை மந்திரியாக பணியாற்றினார். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து வந்த காகேரி, பட்டதாரி ஆவார். காகேரி, பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.