இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு- கிராம கோவில் பூசாரிகள் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
திண்டுக்கல்,
இந்து சமய அறநிலையத்துறையின் திண்டுக்கல் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு, கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பூசாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட அருள்வாக்கு பேரவை அமைப்பாளர் சாமி, பேரவை நகர அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், சுப்பையா உள்பட கிராம கோவில் பூசாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சங்கு ஊதி, மணி அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது பூசாரிகளின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், வயதான பூசாரிகள் ஓய்வூதியம் பெறமுடியவில்லை. எனவே, வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மேலும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தபடி அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
அதேபோல் பூசாரிகள் நலவாரியத்தின் மூலம் பூசாரிகளுக்கு புதிதாக நலவாரிய அட்டை வழங்கப்படுவது இல்லை. பழைய அட்டைகளையும் புதுப்பித்து கொடுப்பதில்லை. நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் பூசாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, பூசாரிகள் நலவாரியம் முறையாக செயல்படுவதோடு, நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.