தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், 3-வது சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை - துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தகவல்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-வது சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Update: 2019-07-29 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு கையாளுவதில் பல்வேறு வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த துறைமுகத்தில் ஏற்கனவே ஒரே நாளில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 639 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டு இருந்தன. இந்த சாதனையை வ.உ.சி. துறைமுகம் முறியடித்து உள்ளது. கடந்த 27-ந்தேதி ஒரே நாளில் 79 ஆயிரத்து 230 மெட்ரிக் டன் நிலக்கரி, 52 ஆயிரத்து 200 டன் எடை கொண்ட 2 ஆயிரத்து 900 சரக்கு பெட்டகங்கள், 49 ஆயிரத்து 167 டன் மற்ற சரக்குகள் ஆக மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சைப்ரஸ் நாட்டை சேர்ந்த எம்.வி.கமேக்ஸ் எம்பிரர் என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் வந்தது. இந்த கப்பல் 229.50 மீட்டர் நீளமும், 36.92 மீட்டர் அகலமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இந்த கப்பல் 85 ஆயிரத்து 224 மெட்ரிக் டன் சுண்ணாம்புக்கல்லை ஏற்றிக்கொண்டு வந்தது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 84 ஆயிரத்து 502 டன் சுண்ணாம்புக்கல் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு பெட்டகங்கள் கையாளுவதற்கு தேவையான முயற்சிகளாலும், சரக்கு பெட்டக முனையங்களின் செயல்பாடுகளாலும், சரக்கு பெட்டகங்கள் கையாளுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் சரக்கு பெட்டகங்கள் கையாளுதல் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டும், சரக்குபெட்டக வர்த்தகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வ.உ.சி. துறைமுகத்தில் 3-வது சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்