கணவரை கொன்ற நபர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் போராட்டம்

கணவரை கொன்ற நபர்களை கைது செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தனது 3 குழந்தைகளுடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2019-07-29 22:45 GMT
மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீாக்கும் கூட்டம், கலெக்டர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேரையூர் தாலுகா கீழக்காடனேரி பகுதியை சேர்ந்தவர் செல்வி, தனது 3 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். முன்னதாக அவர் கலெக்டர் ராஜசேகரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் குமார் கல்குவாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அன்றைய தினம் இரவு, அவரை சிலர் அடித்து கொலை செய்து உள்ளனர். ஆனால் அதனை விபத்து போல் சித்தரித்துவிட்டனர். கல்குவாரி மலையில் முறைகேடாக கல் அள்ளியதை அரசுக்கு தெரியப்படுத்தியதால் எனது கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் இதுவரை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் அன்னை அனைத்து கட்சி ஆட்டோ தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த குழு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மதுரை மாநகரில் புதிய ஆட்டோக்களுக்கு அரசு வழங்கும் ரூ.500 உரிமத்தை, தற்போது இடைத்தரகர் மூலம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதனால் ஏழை ஆட்டோ தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் திருவிழா நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு செல்கின்றனர். அங்கு துப்புரவு பணியில் தமிழகம் முழுவதும் இருந்து சென்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு துப்புரவு பணியினை மேற்கொள்ள போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் நிலை இருக்கிறது. எனவே அவர்கள் பணி முடிந்து திரும்பும் போது அவர்களுக்கு முழு பரிசோதனை செய்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற சான்றிதழுடன் ஊர் அனுப்ப வேண்டும். இதேபோல் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களுடன், ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் மதுரையில் உள்ள அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளதாகவும், அதை சரி செய்ய கோரியும் குடைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளுடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்