சீராக குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்களை சிறைபிடித்து கிராமமக்கள் சாலை மறியல்

சீராக குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

Update: 2019-07-29 22:45 GMT
அந்தியூர்,

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எண்ணமங்கலம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அம்மாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்தும் குழாய் வழியாக தண்ணீர் கொண்டுவந்து வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த 7 நாட்களாக எண்ணமங்கலம் பகுதி மக்களுக்கு சீராக தண்ணீர் வழங்கவில்லை என்று தெரியவருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் எண்ணமங்கலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் கோவிலூரில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டவுன் பஸ் உள்பட 2 அரசு பஸ்களை சிறைபிடித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பெருமாள், வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், ‘7 நாட்களாக முறையாக தண்ணீர் விடவில்லை. இரவில் சிறிது நேரம் மட்டுமே தண்ணீர் விடுகிறார்கள். எப்படி பிடிப்பது? என்று முறையிட்டார்கள். இதைத்தொடர்ந்து அதிகாரிகள், புதிய குழாய்கள் அமைக்கப்படுவதால் தண்ணீர் வினியோகிப்பதில் பிரச்சினை உள்ளது. விரைவில் உங்களுக்கு சீராக தண்ணீர் வினியோகிக்கப்படும்’ என்று உறுதி அளித்தார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், மாலை 4 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்