சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் - பெண்ணாடம் அருகே பரபரப்பு

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2019-07-29 22:30 GMT
பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 12 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து இறையூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கஞ்சி தொட்டி திறந்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இறையூர் கிராம மக்கள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கினர்.

முன்னதாக தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் தமிழக அரசு இப்போராட்டத்தை தனிக்கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தினசரி கஞ்சி தொட்டி திறந்து தொழிலாளர்களுக்கு கஞ்சி வழங்கப்படும் என்று கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்