திண்டுக்கல் அருகே, வீட்டில் அடைத்து வைத்திருந்த போது மீட்பு, உணவில் மயக்க மருந்து கலந்து கடத்தப்பட்ட பீகார் மாணவி - விசாரணையில் பரபரப்பு தகவல்
திண்டுக்கல் அருகே வீட்டில் அடைத்து வைத்திருந்த போது மீட்கப்பட்ட பீகார் மாணவி, உணவில் மயக்க மருந்து கலந்து கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல்,
பீகார் மாநிலம் லூரியா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேற்கு சம்ரான் கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 11-ந்தேதி பள்ளிக்கூடம் சென்றாள். அதன் பிறகு அவள் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து லூரியா போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே அந்த மாணவி தமிழகத்துக்கு கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவள், திண்டுக்கல் அருகேயுள்ள பள்ளப்பட்டியில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு லூரியா போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து திண்டுக்கல் வந்த லூரியா போலீசார், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியை நாடினர். உடனே அவர்கள், பள்ளப்பட்டிக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் அங்கு கைக்குழந்தையுடன் கூடிய ஒரு பெண்ணையும் பிடித்தனர். பின்னர் அந்த மாணவியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மற்றொரு மாணவி மூலம் கைக்குழந்தையுடன் இருந்த பெண் அவளை கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:-
சம்பவத்தன்று கடத்தப்பட்ட மாணவியை, அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவி, கல்வி உதவித்தொகை பெற்று தருவதாகவும், அதற்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளாள். அப்போது மயக்க மருந்து கலந்த உணவை கடத்தப்பட்ட மாணவிக்கு கொடுத்து இருக்கிறாள். அதை சாப்பிட்டதும் மயக்கமான அவளை, பெத்ரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளாள்.
அங்கு கைக்குழந்தையுடன் நின்ற சைமா என்ற பெண்ணிடம் மயக்க நிலையில் இருந்த மாணவியை ஒப்படைத்தாள். பின்னர் சைமா, அவர்கள் இருவரையும் மைசூரில் இருக்கும் தனது கணவர் நசீரிடம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து 4 பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்துள்ளனர். பின்னர் நசீர், தன்னுடன் 10-ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்று விட்டாராம். சைமா கைக்குழந்தையுடன், கடத்தப்பட்ட மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளப்பட்டிக்கு வந்து அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் நாங்கள் அங்கு சென்று அந்த மாணவியை மீட்டோம்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட மாணவி மற்றும் அவரை கடத்தி வந்த சைமா, அவருடைய குழந்தை ஆகியோரை லூரியா போலீசாரிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் பீகாருக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்று விசாரணை நடத்திய பின்னரே, மாணவி கடத்தலுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.