படிப்பை தொடர உதவக்கோரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மனு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் படிப்பை தொடர உதவக்கோரி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மனு அளித்தனர்.;

Update: 2019-07-29 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 480-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கொடுத்த மனுவில், நாங்கள் விராலிமலை உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறோம். நாங்கள் கடந்த ஆண்டு நேரடியாக 2-ம் ஆண்டு சேர்ந்தபோது கல்லூரி நிர்வாகம் எங்களிடம் எந்த பணமும் நீங்கள் கட்ட தேவையில்லை எனக் கூறி எங்களை கல்லூரியில் சேர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் உங்களுக்கு இதுவரையிலும் அரசு வழங்கி கொண்டிருந்த நிதி உதவியை நிறுத்தி உள்ளது. எனவே நீங்கள் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறினர். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக எங்களால் கல்லூரி நிர்வாகம் கூறிய பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் எங்கே படிப்பு பாதியிலேயே நிற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களது படிப்பை மீண்டும் தொடர உதவ வேண்டும் என கூறியிருந்தனர்.

கந்தர்வகோட்டை மருத்துவர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுக்கு ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் மூலமாக 2½ ஏக்கர் நிலத்தில் 63 பேருக்கு தலா 3 சென்ட் வீதம் மனைகளாக கடந்த 1993-ம் ஆண்டு கொடுத்தார்கள். கொடுத்து 26 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்களது வீட்டுமனை கிராம நிர்வாக அதிகாரியால் கிராம கணக்கில் ஏற்றப்படவில்லை. இதனால் எங்களால் அரசு வழங்கும் இலவச வீடு மற்றும் வங்கி கடன் பெற முடியவில்லை. எனவே எங்களது வீட்டு மனையை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை கல்யாணராமபுரம் 2-ம் வீதியை சேர்ந்த அருள்முருகன் கொடுத்த மனுவில், நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் பாலபிரசன்னா 2016-17-ம் ஆண்டு 8-ம் வகுப்பில் புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். நான் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கட்டணம் மற்றும் தங்கும் விடுதி கட்டணம் அனைத்தையும் முழுமையாக செலுத்தி வந்தேன். எனது மகன் தற்போது 2018-19-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளான்.

நான் 10-ம் வகுப்புக்கு கட்ட வேண்டிய அனைத்து கட்டணங்களையும் கட்டி விட்டேன். ஆனால் பள்ளி நிர்வாகம் கூடுதலாக ரூ.61 ஆயிரம் தந்தால்தான் பள்ளி சான்றிதழ்களை தருவதாக கூறுகிறார்கள். எனவே கூடுதல் கட்டணம் கேட்டு பள்ளி சான்றிதழை தரமறுக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து எனது மகனின் பள்ளி சான்றிதழை பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.

கூட்டத்தில் பொன்னமராவதி தாலுகா காட்டுப்பட்டி, வெள்ளையாண்டிபட்டி, ஏனமேடு, இந்திரா நகர், வேகுப்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், காட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேங்கை ஊரணி எனும் குடிநீர் குளம் உள்ளது. இந்த ஊரணிக்கு உள்ள பல ஏக்கர் பாறை கல்லாங்குத்து புறம்போக்கு மேட்டுப்பகுதியில் விழும் மழைநீர் வாரி வழியாக இந்த குளத்திற்கு வருகிறது. இந்நிலையில் பாறை கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முயற்சிப்பதாக தெரிகிறது. இதனால் குளத்திற்கு வரும் நீர் தடைப்படும் அபாயம் உள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும். எனவே நாங்கள் பாறை கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே வேறு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்