மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான தாவூத் இப்ராகிம் தம்பி மகன் மீது மோக்கா சட்டம் பாய்ந்தது
மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான தாவூத் இப்ராகிம் தம்பி மகன் மீது மோக்கா சட்டம் பாய்ந்தது.
மும்பை,
மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா சோட்டா சகீல் கூட்டாளி அப்ரோஸ் வடாரியா என்பவரை போலீசார் அண்மையில் துபாயில் இருந்து வந்தபோது, விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், இந்த வழக்கில் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் காஸ்கரின் மகன் ரிஸ்வான் காஸ்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில், வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ரிஸ்வான் காஸ்கரை மும்பை விமான நிலையத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அஸ்பக் தவால்வாலா என்பவரும் கைதானார். போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், ரிஸ்வான் காஸ்கர் மீது போலீசார் மராட்டிய திட்டமிட்ட குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் (மோக்கா) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.