மராட்டியத்தில் புலிகள் எண்ணிக்கை 312 ஆக உயர்வு
மராட்டியத்தில் புலிகள் எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளது.
நாக்பூர்,
காடுகளையும், காட்டின் சூழலையும் அழியாமல் பாதுகாக்க புலிகளை காப்பது அவசியம். இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று புலிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக கடந்த (2018) ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
அதில், “கடந்த 2014-ம் ஆண்டில் 1,400 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிகமாகவும், பாதுகாப்பாகவும் புலிகள் வாழ்வதற்கு உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது” என தெரிவித்தார்.
மராட்டியத்தில் 2014-ம் ஆண்டு கணக் கெடுப்பின்போது 190 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை பிரதமர் வெளியிட்ட நேற்றைய கணக்கெடுப்பின்படி 312 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மராட்டிய வனத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய அளவில் புலிகளின் எண்ணிக்கை 20 சதவீதமாகவும், மராட்டிய அளவில் 64 சதவீதமும் அதிகரித்துள்ளது. புலிகள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாகவே இந்த வெற்றியை அடைய முடிந்துள்ளது. மாநிலத்தில் புலிகளின் நடமாட்டத்தை இணையத்தின் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.