மஞ்சூர் அருகே, ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டம் அகற்றம் - வருவாய்த்துறையினர் நடவடிக்கை

மஞ்சூர் அருகே ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை வருவாய்த்துறையினர் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2019-07-29 22:45 GMT
மஞ்சூர், 

மஞ்சூர் அருகே முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தக்கர் பாபா நகர் உள்ளது. இங்குள்ள இந்திரா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, தேயிலை விவசாயம் செய்து வந்தனர். அந்த நிலத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுக்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக அரசு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தர விட்டார்.

இதைத்தொடர்ந்து குந்தா வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த வாரம் பொக்லைன் எந்திரம் கொண்டு தேயிலை தோட்டத்தை அகற்ற வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

போதிய பாதுகாப்பு இல்லாததால் வருவாய்த்துறையினரும் வேறு வழியின்றி அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று குந்தா வருவாய்த்துறை அதிகாரிகள் 4 பொக்லைன் எந்திரங்களை கொண்டு சென்று, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் போலீசார் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு தேயிலை தோட்டத்தை அகற்றும் பணி நடைபெற்றது. வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்