அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண்மை படிப்புக்கு 12 ஆயிரத்து 374 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கு 3 ஆயிரத்து 281 விண்ணப்பங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 1,763 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 303 இளம் அறிவியல் வேளாண்மை விண்ணப்பங்களும், 82 இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) விண்ணப்பங்களும், 25 தோட்டக்கலை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
வேளாண் பட்டய படிப்புக்கு 1,214 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 35 விண்ணப்பங்களும், தோட்டக்கலை பட்டய படிப்புக்கு 599 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 20 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை படிப்புகளுக்கு தரவரிசை பட்டியலை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் முருகேசன் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தர வரிசை பட்டியலை மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in மூலம் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள் மேல்நிலை படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இடஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வு விவரம் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) மூலமாகவும் அனுப்பப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தொடர்புக்கு auadmissi-ons2019@gmail.com என்ற முகவரியிலும், உதவி மைய தொலைபேசி எண்:- 04144-238349 ஆகியவற்றில் தகவல்களை பெறலாம்.
இவ்வாறு துணைவேந்தர் முருகேசன் தெரிவித்தார்.
இந்த தர வரிசை பட்டியலில் அரசு ஒதுக்கீட்டுபடி இளம் அறிவியல் வேளாண்மை படிப்பில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று கன்னியாகுமரி மாணவி ரேவதி முதலிடத்தையும், தர்மபுரி மாணவர் சுரேஷ் 2-வது இடத்தையும், சிதம்பரம் மாணவி சவுமியா 3-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல் இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), தோட்டக்கலை, பட்டய படிப்புகளுக்கும், தொழிற்பயிற்சி பிரிவு படிப்புகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கிருஷ்ணமோகன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வநாராயணன், மாணவர் சேர்க்கை ஆலோசகர் ராம்குமார், வேளாண்மை துறை முதல்வர் சாந்தாகோவிந்த், மக்கள் தொடர்பு அலுவலர் காளிதாஸ் உள்பட பல்வேறு துறை தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.