முழுகொள்ளளவை எட்ட 1.29 அடியே பாக்கி நாராயணபுரா அணையில் இருந்து ஒரு லட்சம் கனஅடி நீர் திறப்பு கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
நாராயணபுரா அணை நிரம்ப இன்னும் 1.29 அடி மட்டுமே பாக்கி உள்ளதால் அணையின் 18 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகர்நாடக மற்றும் கடலோர கர்நாடகம், மலைநாடு கர்நாடகம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் யாதகிரி மாவட்டம் சோரப்புராவில் உள்ள நாராயணபுரா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்றைய நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 1,615 அடி கொள்ளளவு கொண்ட நாராயணபுரா அணையின் நீர்மட்டம் 1,612.71 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 1.29 அடி மட்டுமே பாக்கி உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 18 மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணா ஆற்றங்கரையோரம் உள்ள விஜயாப்புரா, ராய்ச்சூர், யாதகிரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டமல்லாமல் தீயணைப்பு துறையினர், தாலுகா நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட மீட்பு குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். விஜயாப்புரா மாவட்டம் தேவதுர்காவில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பசதேவர கோவிலை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தப்படி செல்கிறது. அத்துடன் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தை தொட்டபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து பார்த்து செல்கிறார்கள். அத்துடன் அவர்கள் தங்களது செல்போன்களிலும் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.