திருக்கடையூர் அருகே கள்ளக்காதலன் வீட்டில் தூக்கில் பெண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

திருக்கடையூர் அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்து தொங்க விடப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-07-29 22:15 GMT
திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள சிங்கனோடை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முக வடிவேல்(வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சண்முக வடிவேல், கள்ளக்குறிச்சியில் தங்கி அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருமணமான காஞ்சனா(35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

தூக்குப்போட்டு தற்கொலை

தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த சண்முக வடிவேல் மனைவி சரிதா கணவருடன் கோபித்துக்கொண்டு திருமெய்ஞானம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து சண்முக வடிவேல், தனது சொந்த ஊரான சிங்கனோடைக்கு கள்ளக்காதலி காஞ்சனாவை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சண்முக வடிவேலுவும், காஞ்சனாவும் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று காலை சண்முக வடிவேல் எழுந்து பார்த்தபோது காஞ்சனா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, குருமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காஞ்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சனா எப்படி தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்