குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டரிடம் மனு
கபிலர்மலை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள், கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
கபிலர்மலை அருகே உள்ள பெருக்குறிச்சி ஊராட்சி செய்யாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
செய்யாம்பாளையம் கிராமத்தில் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. காவிரி குடிநீர் மட்டும் வாரம் இருமுறை கொடுக்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த 6 மாதங்களாக சரியாக வினியோகம் செய்யப்படவில்லை.
குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர் வெளிமாநிலத்திற்கு ரிக்வண்டி வேலைக்கு சென்று விட்டார். இதனால் எங்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. இது தொடர்பாக நாங்கள் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே புதிதாக ஆபரேட்டர் ஒருவரை நியமனம் செய்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளையும் சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் என்.புதுப்பட்டி ஊராட்சி ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜங்களாபுரம் கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு செல்லும் சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது ஆகும். தற்போது அது பழுதாகி விட்டதால், புதுப்பிக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் கொண்டு குழி பறித்து போட்டனர். ஆனால் சாலை இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. எனவே சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். சாலைகள் பழுதான நிலையில் இருப்பதால் தண்ணீர் லாரிகள் கூட வர முடியவில்லை. எனவே குடிநீர் வசதியும், சாலை வசதியும் உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.