தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-29 22:45 GMT
சென்னை,

மத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக மத்திய அரசு அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வி.மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வி.மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்கனவே உள்ள கல்வி கொள்கையில் பெற்றுவந்த உரிமைகள் இந்த புதிய தேசிய கல்வி கொள்கையில் மறுக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு ரகசியமாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறது. புதிய கல்வி கொள்கையில் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இடஒதுக்கீடு தகர்க்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இந்த கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போல் இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களிடம் முறையாக கருத்துக்கேட்டு ஏற்கனவே வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப்பெற்று, மீண்டும் புதிய கல்வி கொள்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்