காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2019-07-29 22:45 GMT
பென்னாகரம், 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து நேற்று வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை முதல் மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 7-வது நாளாக நீடித்தது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்தனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது. அவர்கள் மெயின் அருவியில் உற்சாகமாக குளித்தனர். மேலும் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் மற்றும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை அவர்கள் கண்டு ரசித்தனர். நீர்வரத்து அதிகரிப்பு மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையால் ஒகேனக்கல்லில் நடைபாதை, அருவி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 8,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று தண்ணீர் வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 44.22 அடியில் இருந்து நேற்று 45.33 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்