சேலத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை ஆட்டோ மீது மரம் விழுந்து டிரைவர் பலி
சேலத்தில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
சேலம்,
வளிமண்டலத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சேலத்தில் நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வாகன ஓட்டிகள் பலர் நனைந்து கொண்டே சென்றதை பார்க்க முடிந்தது. இதுதவிர தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையின் போது மதியம் 2.40 மணிக்கு திடீரென்று சூறாவளி காற்று வீசியது. இதனால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது அந்த மரம் விழுந்தது. இதில் ஆட்டோ சேதமடைந்தது. மேலும் ஆட்டோ டிரைவரான சேலம் கோரிமேடு பொன்நகரை சேர்ந்த ஸ்ரீதரன்(வயது 61) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த சாரதா கல்லூரி மெயின் ரோடு பூசாரி நகரை சேர்ந்த மதன்(20) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே டிரைவர் ஸ்ரீதரன் பரிதாபமாக இறந்தார். அரசு ஆஸ்பத்திரியில் மதனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் ஏற்காட்டிலும் நேற்று மதியம் 2 மணி முதல் கனமழை பெய்தது. மேலும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவ, மாணவிகள் பலர் நனைந்து கொண்டே சென்றனர். குறிப்பாக ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் மழை காரணமாக வெளியே வராமல் விடுதிகளிலேயே தங்கினர். மேலும் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் மேக மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.