தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கும் வரை வேலூர் நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் வேலூரில், அய்யாக்கண்ணு பேட்டி

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கும் வரை வேலூர் நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வேலூரில் அய்யாக்கண்ணு கூறினார்.

Update: 2019-07-29 13:30 GMT

வேலூர், 

தேசிய–தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்கு கூட 3 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் கொடுக்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் 90 சதவீத வயல்கள் காய்ந்து போய் விட்டது. அதனால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் 2016–ம் ஆண்டிற்கு பின்னர் குடிநீர் பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசின் ‘ஸ்வராஜ் அபியான்’ திட்டத்தில் 51 சதவீதம் விவசாயம் முடங்கினால் அந்த மாநிலத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் தமிழகத்தில் 90 சதவீத விவசாயம் முடங்கி உள்ளது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் பயிர்காப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தோம். அப்போது அவர் 10 நாட்களில் வறட்சி மாநிலமாக அறிவிப்பதாக கூறினார். ஆனால் இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விட்டு வேலூர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். இதுதொடர்பாக வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுக்க உள்ளோம். தொடர்ந்து சென்னை, டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாய கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், சென்னை தலைமை செயலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ளவும் விவசாயிகள் தயங்க மாட்டோம் இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் அளித்தனர்.

இதே போல திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்று அங்கு கலெக்டர் கந்தசாமியிடம் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தை குடிநீருக்காக மட்டுமே வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விளைபொருட்களுக்கு நாங்கள் காப்பீடு தொகை கட்டி உள்ளோம்.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கடந்த 2016–ம் ஆண்டுக்கான காப்பீடு தொகையை இன்னும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கவில்லை. 2016–ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கே காப்பீடு தொகையை முழுமையாக கலெக்டர் வாங்கி தர வேண்டும். இல்லை என்றால் தலைமை செயலகத்தில் தற்கொலை போராட்டம் நடத்துவோம்.

மேலும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8 வழிச்சாலையை அமைப்பதிலேயே ஆர்வமாக உள்ளார். ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்க அரசு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்