2-வது மாநில மாநாடு, மக்களுக்கு பாதிப்பில்லாத தொழிலாக பட்டாசு தொழில் மாற்றப்படும் - உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பேச்சு
தமிழ்நாடு பட்டாசு வணிகர்களின் கூட்டமைப்பின் 2-வது மாநில மாநாட்டில் பேசிய உற்பத்தியாளர் சங்க தலைவர், மக்களுக்கு பாதிப்பில்லாத தொழிலாக பட்டாசு தொழில் மாற்றப்படும் என்றார்.
மதுரை,
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் 2-வது மாநில மாநாடு மதுரை பாண்டி கோவில் துவாரகா பேலஸ் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கந்தசாமிராஜன், இணை பொருளாளர் பாண்டியராஜன், ஒருங்கிணைப்பாளர் ரவித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை கலெக்டர் ராஜசேகர் தொடங்கி வைத்து விழா மலரை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் பெற்று கொண்டார். இதில் தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார், அணில் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் ராஜேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீபாவளிக்கு ஒருமாதத்திற்கு முன்பே பட்டாசு வணிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு மிகவும் வரவேற்கத்தக்கது. பட்டாசுகள் உற்பத்தி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நடைபெறுவதற்கு தமிழக அரசு தான் காரணம். இனிமேல் பழைய விதிமுறைபடி பட்டாசு தயாரிக்க முடியாது. விஞ்ஞானிகள் வழங்கிய ஆலோசனைப்படி தான் பட்டாசு தயாரிக்க கோர்ட்டு அனுமதி அளிக்கும்.
பசுமை பட்டாசு உற்பத்தியால் உலக அளவில் பல்வேறு இடங்களில் இருந்து ஆர்டர்கள் அதிக அளவில் வரும். உலகமே நமது பசுமை பட்டாசு உற்பத்தியை திரும்பி பார்க்கும். அதிக விற்பனை நடைபெறும். பழைய முறையில் பட்டாசு உற்பத்தி நடந்தால் நமக்கு முன்னேற்றம் இருக்காது. பட்டாசுகளை ஆய்வுக்கு உட்படுத்த சிவகாசியில் பெரிய ஆய்வகம் ஒன்று தொடங்கப்படுகிறது. நமது பட்டாசுகள் மூலம் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதனை உணர்த்த வேண்டும். பசுமை பட்டாசு என்பது காலத்தின் கட்டாயம். மத்திய-மாநில அரசுகள் இந்த தொழிலை பாதுகாக்க முயற்சி எடுக்கிறது. மக்களுக்கு பாதிப்பில்லாத தொழிலாக இந்த தொழில் மாற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் பட்டாசுகள் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். சீன பட்டாசுகள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். பட்டாசு கடை உரிமத்தை புதுப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். மந்தன் யோஜனா ஓய்வூதிய திட்டத்தை 18 வயது முதல் 55 வயது வரை நீட்டிக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை கொண்டாட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.