திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர் பகுதிகளில், அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர் பகுதிகளில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி அப்துல்கலாம் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் தலைமையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பள்ளி குழு தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடனகுருநாதன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளும் அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து அப்துல்கலாம் மாணவர்களுக்காக வழங்கிய 10 கட்டளைகளை மாணவர்கள் நினைவுகூர்ந்து அதன்படி நடப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
மதுரை பசுமலையை அடுத்த தியாகராஜ காலனியில் பொதுமக்கள் சார்பில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பழனிசாமி, மின்வாரிய ஊழியர் நாகராஜ், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஹார்விபட்டியில் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மையத்தின் சார்பில் அதன் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மன்ற பொருளாளர் அண்ணாமலை, செயலாளர் குலசேகரன், இளைஞரணி பொறுப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த அப்துல்கலாம் நினைவு தின நிகழ்ச்சியையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, அதை நடும் விழா நடந்தது. முன்னதாக நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். கிரேட் டிரஸ்ட் தொண்டு நிறுவன உறுப்பினர் விஜயராணி முன்னிலை வகித்தார். மேலும் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.