ஆழ்வார்குறிச்சி அருகே ஊஞ்சல் விளையாடிய பள்ளி மாணவி சாவு
ஆழ்வார்குறிச்சி அருகே சேலையால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடும் போது, கழுத்தில் சேலை சிக்கி இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார்.
கடையம்,
ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி. கூலி தொழிலாளி. இவரது மகள் ரேவதி(வயது14). இவர் காரையாறில் உள்ள உண்டு உறைவிட பள்ளிக்கூடம் ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டதால் அவள் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டுக்கு எதிர்புறம் உள்ள புளியமரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டி ரேவதியும், அவரது தோழிகளும் விளையாடி கொண்டு இருந்தனர்.
ஊஞ்சலில் விளையாடி கொண்டு இருந்த ரேவதியின் கழுத்தில் திடீரென்று சேலை சுற்றி இறுக்கியுள்ளது. இதனால் அவர் நிலைதடுமாறியுள்ளார். இதை பார்த்து பதறிப்போன சக தோழிகள் கதறியுள்ளனர். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு சென்றனர்.
அங்கு சேலையால் கழுத்தில் இறுக்கப்பட்ட நிலையில் மயங்கி இருந்த ரேவதியை மீட்டு, கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட பெற்றோர், உறவினர்கள், தோழிகள் கதறி அழுதனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.