வடக்கன்குளம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த அண்ணன்- தம்பி கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
வடக்கன்குளம் அருகே மூதாட்டியிடம் சங்கிலி பறித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.;
வடக்கன்குளம்,
வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரை சேர்ந்த வீரத்துரை என்பவருடைய மனைவி சூரியகுமாரி (வயது 70). இவர் சம்பவத்தன்று இரவு ஊருக்கு அருகில் உள்ள தில்லை காளியம்மன் கோவில் முன்பு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 3 பேர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் திடீரென சூரியகுமாரி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். இதனால் திடுக்கிட்ட சூரியகுமாரி, திருடன் திருடன் என கூச்சலிட்டதும், அவன் சங்கிலியை வேகமாக பறித்தான். இதில் சங்கிலி பாதியாக அறுந்தது. அந்த சங்கிலியுடன் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு தப்பி ஓடினர். தகவல் அறிந்ததும் போலீசார் வந்து மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர்.
இதுகுறித்து பழவூர் போலீசில் சூரியகுமாரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்த சேர்மத்துரை மகன்கள் சதீஷ் (22), ராஜேஷ் (19) ஆகியோர் சூரியகுமாரியிடம் சங்கிலி பறித்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவரை தேடி வருகின்றனர்.